ஈரோட்டில் நள்ளிரவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண பலூன்களை பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, ஈரோடு மக்கள் வண்ண பலூன்களை மேலே பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனா்.
2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, ஈரோடு மக்கள் வண்ண பலூன்களை மேலே பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனா்.
நாடு முழுவதும் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஈரோட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஈரோட்டில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிஎஸ்ஐ பிரப் நினைவு ஆலயத்தின் மேல்பகுதியில் உள்ள டிஜிட்டல் பலகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் ஹேப்பி நியூ இயர் என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக குரல் எழுப்பி, தாங்கள் கைகளில் வைத்திருந்த வண்ண பலூன்களை மேலே பறக்கவிட்டு, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர், குழுக்களாக சேர்ந்து கேக் வெட்டியும், ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டியும் மகிழ்ந்தனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வீதிகளில் இளைஞர்கள் நடமானம் ஆடியும், பட்டாசு, வாணவேடிக்கைகள் வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளில் கேக் வெட்டி புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடினர். மேலும், ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.