கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை 22 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு இடங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 5-ம் தேதி முதல் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் வெளியற்றப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் 9,600 கன அடி வரை தண்ணீர் வரத்து இருந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கொடிவேரி அணை கடந்த 26-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளதாலும், கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாலும், 22 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.