ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுகவின் இரும்புக்கோட்டை; முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி மீண்டும் எடப்பாடி ஆட்சியை கொண்டு வர உதவும் என முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான அண்ணா திமுக பூத் கமிட்டி கூட்டம் வில்லரசன்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது, சுமார் 98.5 சதவீத தொண்டர்கள் எடப்பாடியுடன் உள்ளார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி எடப்பாடியின் கரங்களை வலுப்படுத்தும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் முன்னோடியாக இருக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி அண்ணா திமுகவின் இரும்பு கோட்டை. ஈரோடு நகர் பகுதியில், ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் 100 வாக்காளர்களை சந்தித்தாலும், திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாலும், முந்தைய அண்ணா திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, திமுக ஆட்சி அனைத்து அம்சங்களிலும் தோல்வியடைந்துள்ளதால், இப்போது எடப்பாடி எப்போது ஆட்சிக்கு வருவார் என்று திமுகவினர்களே கேட்க ஆரம்பித்துள்ளனர். தற்போது, சொத்து வரி, தண்ணீர், மின் கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் மின் கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்படும். டீக்கடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுகிறது.
மறுபுறம், பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, பல தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், ஆட்சிக்கு எதிராக மக்களின் கோபம் காணப்படுகிறது. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய பூத் குழு உறுப்பினர்கள் முழுமையாகப் பாடுபட வேண்டும். இடைத்தேர்தலில் கிடைக்கும்வெற்றி, மாநிலத்தில் மீண்டும் எடப்பாடி ஆட்சியைக் கொண்டுவர உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர மாவட்ட அண்ணா திமுக செயலாளருமான ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் ஜெய்ஸ்ரீ ராமசாமி, எம்எல்ஏ ஜேகே (எ) ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பிக்கள் செல்வகுமார சின்னையன், சத்தியபாமா, முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், சூப்பர் சுப்பிரமணியம், ஈரோடு மாநகர பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜ், ஜெயராஜ் (எ) முனுசாமி, முருகசேகர், ராமசாமி, மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமி மோகன், பாப்பாத்தி மணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரத்தின் பிரித்திவி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் கே.எஸ்.நல்லசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் துரை சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சின்ன (எ) சண்முகம் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.