ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்திட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்திட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி ஆசனூர் மற்றும் பர்கூர் பகுதியில் செயல்படுகிறது. உயர்நிலைப்பள்ளி தலமலை, கெத்தேசால் மற்றும் கொங்காடை ஆகிய பகுதியில் செயல்படுகிறது. நடுநிலைப்பள்ளி -9-ம், துவக்கப்பள்ளி 7-ம் செயல்பட்டு வருகிறது.
நடப்பு 2024-25 கல்வியாண்டிற்கான பள்ளிகள் வருகின்ற 10ம் தேதி முதல் துவங்க உள்ளது. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க அரசுப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்படுகின்றது. பாடக்குறிப்பேடுகள், புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள், கிரையான்ஸ், நில வரைப்படம், கணித உபகரணப்பெட்டி மற்றும் நான்கு இணை சீருடைகள், காலணிகள், பேருந்து பயண அட்டை கிராமப் புற பெண் கல்வி ஊக்கத் தொகை, தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறித் தேர்வு ஊக்கத்தொகை மற்றும் ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்கப்படுகின்றது. எனவே. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தை களை பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் சேர்த்து முன்னுரிமை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்று கல்வி பயில வேண்டும்.
சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அலுவலகத்தினையும், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.