பவானி நகராட்சியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்;
பவானி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகரமன்ற தலைவர் சிந்தூரி முன்னிலையில் 27வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் 32 பொருட்கள் அடங்கிய தீர்மானம் உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
இதில் நகராட்சி ஸ்டேசனரி பொருட்கள் வாங்குவதற்கான தீர்மானம், குப்பைகள் தனியார் கொடுப்பதற்கான செலவு, வார்டுகளில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்வதற்கான செலவினங்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார பணிக்கான செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, நகரமன்ற உறுப்பினர்கள் கோடை காலம் தொடங்கி இருப்பதால் இருபத்தி ஏழு வார்டுகளிலும் பொது மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் தேவையான வசதிகள் தொடர்பாகவும் ஆணையாளரிடம் முன்வைத்தனர்.