பவானி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞர் பலி
பவானி அருகே தனியார் நிறுவன பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 37). இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக பவானி சென்றுவிட்டு மேட்டூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பெருந்துறையை சேர்ந்த தனியார் ஜவுளி நிறுவன பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செல்லமுத்துவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக விபத்திற்கு காரணமான தனியார் நிறுவன பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடியை கிராம மக்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.