அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் சந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-04-02 04:10 GMT

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையான கர்கேகண்டி கிழக்கு பீட், போதமலை தெற்கு பீட் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டரை சரகம் எம்மட்டி பள்ளத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து, பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் , சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ரத்தினகுமார், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பர்கூர் போலீசார் ஆகியோர் பாதி எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூடை பார்வையிட்டனர்.

இதனையடுத்து, போலீசார் முதலில் ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்ட போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா? என்று விசாரணையை தொடங்கினர். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பேரிகையை அடுத்த சின்னக்குட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (24) என்பவர் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோருடன் சக்திவேல் சந்தன மரம் வெட்டுவதற்கு பர்கூர் வனப் பகுதிக்கு வந்ததது தெரியவந்தது.

மேலும், மரம் வெட்டும் போது துப்பாக்கி சத்தம் கேட்டு நால்வரும் ஆளுக்கொரு திசையில் ஓடினர். இதில், சக்திவேலை மட்டும் தனியே விட்டுவிட்டு மூவரும் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இந்நிலையில், எம்மம்பட்டி பள்ளம் பகுதியில் பாதி எரிந்த நிலையில், தலை, எலும்புத்துண்டு கிடந்ததை, வெங்கடேஷ், ராஜேந்திரன் இறந்து கிடந்தது காணாமல் போன சக்திவேல் என உறுதி செய்தனர்.

இதையடுத்து, சந்தன மரம் வெட்டிய போது, மற்றொரு கும்பலிடம் சிக்கிக் கொண்டதில் சக்திவேல் எரித்து கொல்லப்பட்டாரா அல்லது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் எரிக்கப்பட்டாரா என்ற பல கோணத்தில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் வனப்பகுதியில் மரம் வெட்ட வந்த வாலிபர் பாதி எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News