பவானி அருகே திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் பவானி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-05-08 01:00 GMT

 பவானி அருகே கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் பவானி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ் அருகே கொளத்துப்பாளையம் காலனியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்டோர் பவானி தளவாய்பேட்டையில் செல்லும் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று மாலை வந்தனர்.

அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 35) என்பவரும் வந்திருந்தார். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தபோது தர்மலிங்கம் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது ஆற்றில் இருந்த சுழலில் சிக்கிக்கொண்டார். நீச்சல் தெரியாததால் கண்இமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

உடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். இரவு 7.30 மணி அளவில் தர்மலிங்கத்தின் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News