சத்தியமங்கலம்: தாளவாடி அருகே பாட்டி, பேரன் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் பெண் கைது!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பாட்டி, பேரன் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-04-16 00:50 GMT

கைது செய்யப்பட்ட நாகேஷ், பாக்யா.

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பாட்டி, பேரன் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இவர்களது மகன் ராகவன் (11), மகள் அமிர்தா (9). இவர்களது வீட்டின் அருகே தொட்டம்மாவின் சித்தி சிக்கம்மா வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு ராகவன் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், ராகவன் பாட்டி சிக்கம்மா வீட்டில் ஏப்ரல் 12ம் தேதி இரவு தூங்க சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை ராகவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிக்கம்மாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சிக்கம்மாவும், ராகவனும் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கோவை சரக டி.ஜ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் தாளவாடி போலீசாருடன் உடல்களை பார்வையிட்டனர். பின்னர், கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தொட்டகாஜனூர், அண்ணா நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பொக்லைன் ஓட்டுநர் நாகேஷ் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பொக்லைன் உரிமையாளரான நாகேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பாக்யா (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதுகுறித்து, சிக்கம்மாவுக்கு தெரிய வந்தது. ஏற்கனவே, அவருக்கும், நாகேசுக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், சிக்கம்மா நாகேஷ், பாக்யாவின் கள்ள உறவு குறித்து பாக்யாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், பெற்றோர் பாக்யாவை கண்டித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த பாக்யா, கள்ளக்காதலன் நாகேசுடன் சேர்ந்து சிக்கம்மாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, நாகேஷ் கடந்த 12ம் தேதி கத்தியுடன் சிக்கம்மாவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது, சிக்கம்மாவிடம் நாகேஷ் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நாகேஷ் சிக்கம்மாவின் தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்தார்.

அப்போது, சத்தம் கேட்டு ராகவன் எழுந்தான். அவன் வெளியில் சொல்லி விடக்கூடாது என்பதற்காக சிறுவன் என்றும் பார்க்காமல் அவனையும் அதே சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு, சிக்கம்மாவின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 3.76 பவுன் நகையையும் நாகேஷ் திருடிச்சென்று பொக்லைன் இயந்திரத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் நாகேசையும், பாக்யாவையும் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News