சத்தியமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை கடித்த நாகப்பாம்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை நாகப்பாம்பு கடித்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
சத்தியமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை நாகப்பாம்பு கடித்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே பசுவனாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் நேற்று முன்தினம் இரவு பாம்பு புகுந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வேட்டை தடுப்பு காவலர் ராமசாமி உள்பட 3 பேர் அங்கு சென்றனர். அப்போது அந்த பாம்பு சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கம்பின் உதவி கொண்டு தலையை அமுக்கி கையில் பிடிக்க முயன்றனர்.
அப்போது பாம்பு வேட்டை தடுப்பு காவலர் ராமசாமியின் விரலில் கடித்தது. உடனே அவர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதுங்கியிருந்த பாம்பு பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.