ஈரோடு: நசியனூரில் காசநோய், வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்!
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் காசநோய் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்றது.;
நசியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் காசநோய் மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டாரம் நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட மூலக்கரையில் உள்ள மிஸ்டர் கோல்டு சன் ராஜா ஆயில் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடுகள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் தொழிலாளர்களின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கோடை வெப்பத் தாக்கத்தினால் ஏற்படும் நீரிழப்பு அதனை ஈடு கட்டும் வழி முறைகள், அடிக்கடி நீர் பருக வேண்டியதின் அவசியம்,கோடைக்கால உணவு முறைகள், கோடை வெப்ப தாக்க அதிர்ச்சியை சமாளிக்கும் வழிமுறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் முக்கியத்துவம், கோடைகாலத்திற்கு ஏற்ற உடைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் தொழிலாளர்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.