பவானி எலவமலையில் புகையிலை, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலையில் புகையிலை மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

Update: 2024-05-23 11:00 GMT

எலவமலை சத்யா நகரில் புகையிலை மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து சுகாதார அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் எடுத்துரைத்தார்.  உடன், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா உள்ளார்.

பவானி அருகே உள்ள எலவமலையில் புகையிலை மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருத்துவ முகாமில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு சுகாதார நலக்கல்வி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இம்முகாமில் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மழைக்காலத்தில் பராமரிக்க வேண்டிய சுற்றுப்புற சுகாதார முறைகள், மழைக்கால நோய்கள் அதற்கான தடுப்பு முறைகள், குடிப்பழக்கத்திலிருந்து மீட்க மனநல ஆலோசனை வழங்கும் இடம், மாவட்ட மனநலத் திட்டத்தின் நோக்கம், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மாவட்ட மனநலப் பிரிவு சமூக சேவகர் கவிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

முகாமில், பொது மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முன்னதாக, அப்பகுதியில் நடைபெறும் டெங்கு தடுப்பு பணிகள் மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் பார்வையிட்டார்.

Tags:    

Similar News