ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க சிறப்பு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.;
ஈரோடு மாநகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டது. பலமடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர். குறிப்பாக திருச்சி, கோவை ஆகிய மாநகராட்சிகளை காட்டிலும் கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகத்தில் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும், வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சொத்துவரி குறைப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் விவரம்:- ஈரோட்டில் விசைத்தறி, ஜவுளி, தோல் பதனிடுதல் உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோவை உள்பட பிற மாநகராட்சிகளுக்கும், ஈரோடு மாநகராட்சிக்கும் சொத்து வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக தெரிவித்தனர். மக்கள், தொழில் அதிபர்களிடம் அதிருப்தி உருவாகி இருப்பதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர்.
அனைத்து மாநகராட்சிகளிலும் 1-4-2022 முதல் பொது சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் ஏ, பி, சி, டி ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதன் மதிப்புக்கேற்ப வரி விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளிலும் மண்டல மதிப்பு பின்பற்றப்பட்டு வரிவிதிக்கப்பட்டது.
எனவே அரசியல் கட்சியினர், தொழிற்துறையினர், வர்த்தக சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் சொத்து வரியை குறைத்து விதிக்க அரசின் சிறப்பு அனுமதி பெறப்படுகிறது. இந்த தீர்மானம் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஈரோடு கிழக்கு வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் பிரசாரம் சென்றபோது, சாலை, சாக்கடை, குப்பை ஆகிய பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சொத்து வரி உயர்வு தொடர்பாக கவுன்சிலர்களை பொதுமக்கள் குற்றம்சாட்டி பேசுவதையும் காணமுடிந்தது. ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் சிறப்பு வாய்ந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கட்டாயம் பரிசீலனை செய்து நல்ல தீர்வை காண்பார்கள்”, என்றார். இதில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.