கஞ்சா இல்லாத கிராமமாக மாற்ற ஈரோடு எஸ்.பி. சசிமோகன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு எஸ்.பி. சசிமோகன் தலைமையில் புதுமை காலனியில் பொதுமக்களை ஒன்றிணைத்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு எஸ்.பி. சசிமோகன் தலைமையில் புதுமை காலனியில் பொதுமக்களை ஒன்றிணைத்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கஞ்சா விற்பனை இல்லா கிராமம் சம்மந்தமாக காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவின் பேரில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர், மற்றும் கோவை சரக காவல்துறை துணைத்தலைவரின் அறிவுறுத்தலின் படியும். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், மேற்பார்வையில் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் முதற் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1562 கிராமங்களில், 250 கிராமங்களை தேர்வு செய்தும், அதில் இதுவரை 190 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக ஈரோடு, நகர உட்கோட்டம், சூரம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதுமை காலனி பகுதியில் கடந்த ஆண்டு வரை அதிகப்படியாக சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வந்ததை, இவ்வாண்டு முற்றிலுமாக கஞ்சாவை ஒழிக்க அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு துணையாக இருந்ததை பாராட்டும் விதமாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புதுமை காலனி, மனருல் உலா மஜீத் மதர்ஸா அருகில் பொதுமக்களை ஒன்றிணைத்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர் பொதுமக்களிடையே சட்டவிரோத செயல்களை தடுக்க உதவியதற்காக பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் எஸ்.பி சசிமோகன் பேசுகையில் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து, அந்த கிராமத்தில் கஞ்சா புழக்கம், விற்பனை முற்றிலும் இல்லை என அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். குற்றங்களை குறைக்க இந்நடவடிக்கை உதவும். ஒவ்வொரு கிராமமாக அந்தந்த காவல்துறையினர் சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்தல், பழைய கஞ்சா வியாபாரிகளின் நடவடிக்கைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், கஞ்சா விற்க மாட்டோம் என எழுதி வாங்குதல், அதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல், காவல்துறைக்கு தொடர்ந்து உதவியாக இருக்க கோரியும், போதை பழக்கம் சம்பந்தமான தீமைகளை பற்றியும், மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் ஈரோடு நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர், சூரம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர், காவல் ஆளினர்கள் மற்றும் புதுமை காலனி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.