அந்தியூர் அருகே மின் கசிவால் தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு எரிந்து நாசமானது.;
அந்தியூர் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் குன்னிக்காட்டை சேர்ந்தவர் மன்னாதன் (வயது 45). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், நேற்று மாலை இவர் வசித்து வந்த குடிசை வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மன்னாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை அணைக்க முடியாததால், இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த உடைமை, பீரோ, கட்டில் உள்ளிட்டவை எரிந்தன.
மேலும், அங்கு சென்ற எண்ணமங்கலம் விஏஓ., சதீஷ்குமார் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.