ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ள நிலையில், அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2023-03-24 13:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இனி மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என மக்கள் இப்போது இருந்தே அச்சப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் 10 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கி, நேரம் செல்ல செல்ல அதன் தாக்கம் அதிகரிப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகிறார்கள். பெண்கள் பலர் சேலையின் முந்தானையையும், துப்பட்டாவை தலையில் போர்த்தி கொண்டும் சென்றார்கள். இதேபோல் பலர் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து கொள்ள குடையை பிடித்தபடி நடந்து சென்றதையும் காணமுடிந்தது.

இந்நிலையில், மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இரவில் மழையும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News