அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை இறந்தது.;

Update: 2025-05-22 07:40 GMT

அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் மழை பெய்துள்ளதால் பசுந்தீவனங்களை தின்று, ஓடைகளில் யானைகள் தண்ணீர் பருகி வருகின்றன.

இந்தநிலையில், அந்தியூர் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனஊழியர்கள் நேற்று காலை அந்தியூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கொம்புதூக்கியம்மன் கோவில் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அதனால், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு, ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனே வனச்சரகர் முருகேசன் மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சத்தியமங்கலம் கால்நடை டாக்டர் சதாசிவம் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, இறந்தது சுமார் 12 வயதுடைய ஆண் யானை, நுரையீரலில் நோய் தாக்கி யானை இறந்துள்ளது என்றார்.

அதன்பின்னர், யானையின் உடலில் இருந்து தலா 1 மீட்டர் நீளமுள்ள 2 தந்தங்களையும் வனத்துறையினர் வெட்டி எடுத்தனர். பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அங்கேயே விடப்பட்டது.

இந்தநிலையில், வெட்டி எடுக்கப்பட்ட தந்தங்கள் பத்திரமாக அந்தியூர் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Similar News