பவானி அருகே சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்து
பவானி-மேட்டூர் சாலையில் சாம்பல் பாரம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியதில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் துணை அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆத்தூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பண்ணன் என்பவர் ஈரோடு நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது, பவானி-மேட்டூர் நெடுஞ்சாலையில் தாண்டவபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மழையின் காரணமாக தீடிரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.
விபத்தில் டிரைவர் கருப்பண்ணன் கால் முறிவு ஏற்பட்டது. இதன் பின்னர் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வீரர்கள் , கிரேன் இயந்திரத்தை கொண்டு டிரைவர் கருப்பண்ணனை, போலீசார் உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் பவானி-மேட்டூர் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தொடர்ந்து விபத்துக்குள்ளான சாம்பல் லாரியை மீட்டு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மேட்டூரில் இருந்து பவானி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்டவை அதிவேகமாக செல்வதால் சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் துரித்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.