ஈரோடு: சிவகிரி அருகே மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மரம் முறிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே அம்மன்கோயிலை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52). இவர் அம்மன்கோயில் அருகே உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்ற தங்கவேல் அங்கு நடந்த நிலக்கடலை ஏலத்தில் ஏலத்திற்கு வந்திருந்த நிலக்கடலை மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.
அப்போது, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. தங்கவேல் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் நின்றார். இந்நிலையில், வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மரம் முறிந்து விழுந்தது.
இதில், ஒரு பெரிய கிளை தங்கவேலின் தலையில் விழுந்து அமுக்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தங்கவேலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தங்கவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.