ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: தென்பட்ட அரிய வகை பறவைகள்
ஈரோடு மாவட்டத்தில் 29 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், அரிய வகை பறவைகள் தென்பட்டன.;
ஈரோடு மாவட்ட வனத்துறை சார்பில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது. இதில், அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை, ஈரோடு ஆகிய 5 வனச்சரகங்களில் 29 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன்படி, அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இதில், பாசையெடுப்பான் குருவி, பச்சை சிட்டு, செம்மார்பு குக்குருவான், பழுப்புத்தலை குக்குருவான், செங்கழுத்து வல்லூறு, மஞ்சள் பிடரி மரங்கொத்தி, வேதிவால் குருவி, நீலக்கண்ணி, பொறி மார்பு சிலம்பன், பெரிய பொன்முதுகு மரங்கொத்தி, மலை மைனா, சிறிய காட்டு ஆந்தை, செம்பழுப்பு வயிற்றுச் சிலம்பன், பழுப்பு மீன் ஆந்தை, நீல பைங்கிளி, ராசாளி பருந்து, சாம்பல் இருவாச்சி, செம்புழை கொண்டை குருவி, பச்சை பஞ்சுருட்டான், வெண்தொண்டை சில்லை, செந்தலை பஞ்சுருட்டான், மஞ்சள் தொண்டை சின்னான், பச்சை புறா என, 50க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.
இதேபோல், சென்னிமலை, கொடுமுடி, வெள்ளியங்கரடு, வாய்பாடி, வெள்ளோடு ஆகிய பகுதிகளில் நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. அப்போது, காட்டுக்கோழி, நாத்தண்ணி, வான்கோழி, கருங்குருவி, கோழிக்குருவி, கடற் காகம், பருந்து, சாம்பல்நாரை, கழுகு, வானம்பாடி, நிலக்காகம், சின்ன பூங்குயில், காட்டுப்புறா, தளபாட்டி பறவை, பச்சை தூக்கான், மரங்கொத்தி, நெருப்புக்குருவி, அரசன் பறவை, முல்லை பறவை அதிக அளவில் காணப்பட்டன. மேலும், கொண்டை ஈச்சிறகு, கொம்பன் மரச்சர்க்குருவி, பழுப்பு மீன் ஆந்தை, தட்டான் குருவி போன்ற பறவைகளும் தென்பட்டன.