ஈரோடு: அத்தாணி அருகே வன ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி; சட்டவிரோதமாக மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே வன ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சென்ற தொழிலாளி வலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-02-25 00:50 GMT

வன ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி.

அத்தாணி அருகே வன ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சென்ற தொழிலாளி வலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகம் அத்தாணி கிழக்கு பாரஸ்ட் பீட், வனக்கோம்பை வனப்பகுதியில் தண்ணீர்பள்ளம் ஏரியில், நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து, வனத்துறையினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், அத்தாணி அடுத்த செம்புளிச்சாம்பாளையம் மலையூர் அம்மன் கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்த தொழிலாளி குருசாமி (வயது 38) என்பதும், சம்பவத்தன்று இவர் மீன் பிடிப்பதற்காக அத்தாணி தண்ணீர்பள்ளம் வரக்கோம்பை ஏரிக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில், ஏரியில் ஏற்கனவே அவர் விரித்திருந்த வலையில் சிக்கிய மீன் பிடித்த போது, அவருடைய கால்கள் எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கி கொண்டது. அப்போது, மதுபோதையில் இருந்ததால் இருந்து அவரால் மீண்டு வரமுடியவில்லை. மேலும், அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் குருசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனத்துறையினருக்கு தெரியாமல் ஏரியில் மீன் பிடித்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News