அந்தியூர் அருகே பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் ஈரோடு ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாம் இன்று (ஏப்ரல் 9ம் தேதி) நடைபெற்றது.;

Update: 2025-04-09 12:20 GMT

அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி, கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாம் இன்று (ஏப்ரல் 9ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் உள்வட்டம், பர்கூர் "அ" கிராமம், கத்தரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மனுநீதி நாள் முகாம் இன்று (ஏப்ரல் 9ம் தேதி) நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தாங்கி, 31 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இம்மனுநீதி நாள் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 13 பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களும், 9 பயனாளிகளுக்கு பழங்குடியினர் இன ஜாதி சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் தொகுப்பு என 31 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையினை வழங்கினார். முன்னதாக, கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.


தொடர்ந்து, இம்முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, கத்திரிமலையில் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.கவிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ கோபால், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News