அந்தியூர் அருகே ஹெல்மெட் அணிந்திருந்தும் லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற தலைமைக் காவலர் மீது லாரி மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-12-10 00:30 GMT

லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சிவக்குமார். கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் தினேஷ்குமார்.

அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற தலைமைக் காவலர் மீது லாரி மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவர் தாளவாடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சேலம் மத்திய புலன் விசாரணை அமைப்பின் பவானி சரக விசாரணை அலுவலராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (டிச.9) அவர் பர்கூரில் இருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்தியூரை அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, சிவக்குமாரின் வந்த இருசக்கர வாகனத்தின் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சிவக்குமார் அணிந்திருந்த தலைக்கவசம் உடைந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சோளகம்பேட்டை காலனி தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைக்கவசம் அணிந்திருந்தும் விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News