அந்தியூர் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய வந்த அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து அந்தியூருக்கு புகையிலை பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை பர்கூர் சோதனைச்சாவடி முன் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். இதில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 90 பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சக்தி விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 42) என்பதும், இவர் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மாற்று பேருந்து ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து காருடன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.