ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.8) ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.8) ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 2025ல் தேர்தல் நடத்தை விதி மீறல் தடுப்பு மற்றும் தேர்தல் செலவினம் குறித்து தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைத்து தேர்தல் நடத்தை விதிகள் அமுல் செய்யப்பட்ட நாள் முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இந்தக் குழுக்கள் தணிக்கையில் பறக்கும் படை, மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி, அவர்களது நிலைகளை கண்டறியவும், பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும் கட்டுப்பாட்டு அறை அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான மரு.மனிஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 94890 93223 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.