ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன? மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.8) நடைபெற்றது.;
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.8) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக கூட்டரங்கில், நடைபெறவுள்ள 98- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற பிப்.5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற ஜன.10, 13 மற்றும் 17 ஆகிய தினங்களில் நடைபெறும். பெறப்பட்ட வேட்புமனுக்களின் மீது ஜன.18ம் தேதி பரிசீலனை நடைபெறும்.
ஜன.20ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி ஆகும். பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பிப்.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகமான மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு புகார்களை அளிக்கலாம். இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி முதற்கட்டமாக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமயம், மொழி, சாதி ஆகியவற்றை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. மத வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. அரசியல் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் இருக்க கூடாது. ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். ஒலிபெருக்கியினை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த கூடாது. அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.
தேர்தல் செலவினங்கனை சமர்பிக்க வேட்பாளர்கள் தனியாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள காலக்கெடு அளவில் 3 முறை விளம்பரம் வழங்க வேண்டும். முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கலின் போது குடியிருந்த அரசு குடியிருப்புகளுக்கான கட்டண நிலுவை தொகை இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது 100 மீட்டருக்குள் 3 வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர்களுடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவு வந்த 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ். என், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, பிரேமலதா (நிலம்), துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.