ஈரோடு: கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட பா.ஜ.க. உறுப்பினர் கைது
கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட பா.ஜ.க. உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.;
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், பா.ஜ.க உறுப்பினர் ஸ்ரீதர் என்பவர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரது கருத்து சாதி கலவரம், மத கலவரம் ஏற்படும் வகையில் உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதன் பேரில் ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் ஸ்ரீதர் (51) மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.