பவானி: அம்மாபேட்டை அருகே குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.;

Update: 2025-03-30 01:10 GMT

பிரவேஷ்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே குட்டையில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள கோணமூக்கனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மகன் பிரவேஷ் (வயது 12). வெள்ளித்திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரவேஷ் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பிரவேஷ் தனது நண்பருடன் பூனாச்சி- வெள்ளித்திருப்பூர் சாலையில் உள்ள குண்டாங்கல்மேடு பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளான். பின்னர், பிரவேஷ் மட்டும் குட்டையில் இறங்கி ஆழமான பகுதியில் குளித்ததாக தெரிகிறது.

அப்போது, நீச்சல் தெரியாததால் பிரவேஷ் தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து, அவனுடைய நண்பன் சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் குட்டையில் மூழ்கிய பிரவேசை மயங்கிய நிலையில் மீட்டனர்.

அதன் பின்னர், அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரவேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News