பவானியில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவி பலி!
ஈரோடு மாவட்டம் பவானியில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவி பலியானார்.;
வர்ஷினி.
பவானியில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவி பலியானார்.
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோவில் அருகே உள்ள காவிரி வீதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் வர்ஷினி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், முனிராஜ் குடும்பத்தினருடன், பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார்.
அங்கு, முனிராஜ், வர்ஷினி மற்றும் குடும்பத்தினர் ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது வர்ஷினியின் தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கி உள்ளது. உடனே அவர் தண்ணீர் குடித்து உள்ளார். ஆனால் இறைச்சி துண்டு வயிற்றுக்குள் செல்லவில்லை. இதனால் வர்ஷினிக்கு சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனே, வர்ஷினியை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள், அரசு மருத்துவமனைக்கு வர்ஷினியை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து வர்ஷினியை பவானி அரசு மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் வர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. மேலும் வர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், 3 மணி நேரம் காத்திருந்தும் வர்ஷினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வர்ஷினியின் உறவினர்கள் பவானி- அந்தியூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் துணை சூப்பி ரண்டு ரத்தினகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
இதில், சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.