தாளவாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.;
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி அகல்யா.
தாளவாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் ஊராட்சியில் உள்ள கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் மகாதேவன் - கனகா. இவர்கள், கூலி வேலை செய்து வருகின்றனர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.
நேற்று மகாதேவன் - கனகா தம்பதியினர் அருகில் உள்ள தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, இரண்டாம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமி அகல்யா அருகில் இருந்த சிறுமிகளுடன் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் இருந்த ஆறாடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி தவறி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை பார்த்த மற்ற குழந்தைகள் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சிறுமியை அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்ட பெற்றோர் சிறுமியை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.