சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் விழுந்து 3½ வயது குழந்தை பலி!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3½ வயது குழந்தை உயிரிழந்தது.;

Update: 2025-04-22 06:10 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3½ வயது குழந்தை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தாயனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு 3½ வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், பூர்ணிமாவின் தந்தை சந்திரசேகரன் (54) நேற்று மதியம் ஆதிராவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே மாதம்பாளையம் காக்கா பொன் தோட்டத்தில் உள்ள கலியுக சித்தர் பீடத்துக்கு வந்தார்.

பின்னர், அவர் சாமி பீடத்தில் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆதிரா அருகே நின்று விளையாடிக் கொண்டிந்தான். இந்த நிலையில் சந்திரசேகரன் தியானம் முடிந்து  திரும்பி வந்து பார்த்தபோது ஆதிராவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்து தேடிப்பார்த்தார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆதிரா விழுந்து மூழ்கி கிடந்தான். உடனே அவனை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஆதிரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News