கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2023-10-25 11:21 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை  சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது மகள் தீபிகா. பல் மருத்துவராக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

அடுத்த மாதம் இவரது மகள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்காக 100 சவரன் நகை வாங்கி வைத்திருந்தனர். திருமணத்தையொட்டி, கடந்த ஒரு வாரமாக  வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று விட்டார். அர்ச்சுனனும் அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர்.

பின்னர், வீடு திரும்பிய இவர்கள், வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டின் சமையலறை பகுதியில் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து வீட்டின் கீழ் பகுதியிலும் மாடியறையிலும் இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, இரண்டு அறைகளிலும் இருந்த  பீரோ உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, பீரோவில் பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அர்ச்சுனன், கோபி போலீசில்  புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வீட்டின் பின் பகுதியில் கொள்ளையர் தப்பிச்சென்ற பகுதிகளை சோதனை செய்தனர். அங்கு, ஒரு பை இருப்பது கண்டு எடுத்து பார்த்த போது, அதிலுள்ள நகைப் பெட்டியில் சுமார் 30 சவரன் நகை இருப்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையர் தப்பி சென்ற போது, நகையை விட்டுச் சென்று இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் கொள்ளையர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை 5 மணியில் இருந்து 8 மணிக்குள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News