அந்தியூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேர் ஆயுதங்களுடன் கைது
அந்தியூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த நகலூர், பெருமாள்பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அதிகளவில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது. இங்கு சூதாட வருவோர் அதிகளவில் பணம் கொண்டு வந்து விளையாடி வந்துள்ளனர். இத்தகவலறிந்த, அந்தியூர் தவிட்டுப்பாளையம், பழனியப்பா 1-வது வீதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் அருண் சக்கரவர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி செய்ய திட்டமிட்டார்.
இதுகுறித்து ரகசியத் தகவல் அந்தியூர் போலீசாருக்கு கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூர் போலீசார் அங்கு ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற அருண் சக்கரவர்த்தி மற்றும் அந்தியூர் அண்ணா சாலை, அருள்முருகன் மகன் கோபி கவிகாளிதாசன், கோபி மொடச்சூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வம், அந்தியூர் பெருமாள்கோயில் புதூரைச் சேர்ந்த ஈஸ்வரன், நகலூர் புதூரைச் சேர்ந்த பொம்மநாயக்கர் மகன் ராமேஸ்வரன், முனியப்பன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார், அந்தியூரை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்குப் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்களிருந்து 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.