ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கல்
ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் மஞ்சள், நாட்டுச் சர்க்கரை, எண்ணெய் உற்பத்தி மற்றும் மாவுமில் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுடைய பயனாளிகளுக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் விவசாயிகள் நலனுக்காக ஈரோடு மாவட்டத்தில் 32 ஆழ்துளை கிணறுகள் அமைக்க குறியீட்டளவு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது வருகிறது.
மேலும், ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் நீராதாரங்களுக்கு மின் இணைப்பும் பெறும் பணிகளின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட பணிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய வலைதளத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறையின் மூலம் தென்னை நாற்றுகள், தெளிப்பான்கள் ஆகியன வழங்கும் திட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட 37500 குறியீட்டளவு முழுமையாக எய்தப்பட்டுள்ளது.
நுண்ணீர் மானிய பாசனத்தில் 30 சதவீதம் உள்ளது. இத்திட்டத்தில் பெருவிவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 818 பணிகளும், நடப்பு நிதியாண்டில் 366 பணிகளும் குறியீட்டளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 55 பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் குட்டைகள் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1.6 இலட்சம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 7 பணிகளும் 100 சதவீதம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளில் 578 கி.மீ நீளம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை முன்னரே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி), இணை இயக்குநர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குமரன், ஜெகதீஷ் , முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், துணை இயக்குநர் சோமசுந்தரம், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் அலுவலர் பிரகாஷ் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.