அந்தியூர் அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரிடம் 5½ சவரன் தங்க தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரிடம் தங்க தாலிக்கொடி பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரிடம் 5½ சவரன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரேமலதா (வயது 52). இவர், குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று (டிச.9) மதியம் தனது இருசக்கர வாகனத்தில் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, குருவரெட்டியூர் - வெள்ளித்திருப்பூர் சாலையில் மன்னாதீசுவரன் கோயில் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர் பிரேமலதாவின் கழுத்தில் இருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 5½ சவரன் தங்க தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதில், காயமடைந்த அவர் வெள்ளித்திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர், அவர் கணவருடன் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.