கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகையினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). கேபிள் தொழிலாளி. இவரது தந்தை அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அவரது தந்தைக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியல்லாததால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து வெங்கடாசலம் அவரது வீட்டை பூட்டி விட்டு இரவு தந்தை வீட்டிலேயே தங்கினார். இந்த நிலையில் வெங்கடாசலத்தின் வீட்டின் பூட்டை உடைத்து சிலர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த கோவிலுக்கு சொந்தமான 4 சவரன் நகையினை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பின்னர், காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடாசலம் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.