ஈரோட்டில் டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது
ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகர் அலுவலகத்தில் டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம் டெலிபோன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருபவர் தட்சிணாமூர்த்தி (51). பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் மாவட்ட தலைவரான இவரது கடையில் கடந்த 22ம் தேதி இரவு பாலித்தீன் கவர்களில் டீசல் நிரப்பி, அதை கடையின் மீது மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதில் ஒரு பாக்கெட் மட்டும் கடை அலுவலக ஜன்னல் கம்பிகள் மீது பட்டு தீ பிடித்தது. ஆனாலும் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. மற்ற 2 டீசல் பாக்கெட்டுகள் கடை வளாகத்தில் அப்படியே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொல்லம்பாளையம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஈரோடு பி.பி. அக்ரஹாரம் கைகோலார் வீதியை சேர்ந்த முகமதுஇலியாசின் மகன் கலில்ரகுமான் (27), ஈரோடு கருங்கல்பாளையம் ஜெகன் வீதியை சேர்ந்த முகமதுரபீக்கின் மகன் சதாம்உசேன் (25), ஈரோடு இந்திராநகரை சேர்ந்த அமானுல்லாவின் மகன் ஜாபர்சாதிக் (27), இவரது தம்பி ஆசிக்அலி (23) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரில் சதாம்உசேன் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினர். மற்றவர்கள் அவரது நண்பர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.