அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொய்யாக்காய் என நினைத்து அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.;
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 8), உதயகுமார் (வயது 8), பூவரசன் (வயது 8). இவர்கள் 3 பேரும் தாசரிபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த நிவேஷ் (வயது 7). அதே பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், 4 பேரும் தாசரிபாளையம் பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, வேலியில் முளைத்திருந்த அரளி காய்களை கொய்யாக்காய் என நினைத்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், சிறுவர்கள் 4 பேரும் தங்கள் வீட்டுக்கு சென்றபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பெற்றோர் விசாரித்ததில் அரளி காய்களை சாப்பிட்டது தெரியவந்தது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் 4 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.