ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பத்தினர் முகாமில் தங்கவைப்பு
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட 370 பேர் ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது அணையில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. இந்த வெள்ளத்தால், பவானி கந்தன் நகர், காவிரி நகர், பாலா கேஸ் குடோன் பகுதி, தீயணைப்பு நிலைய பின்புறம் (காவிரி வீதி), மார்க்கெட் வீதி, பசுவேஸ்வரர்வீதி பகுதியில் 48 குடும்பத்தை சேர்ந்த 134 பேரும், கொடுமுடி தாலுக்கா இலுப்பைதோப்பு பகுதியில் 14 குடும்பங்களை சேர்ந்த 49 பேரும், மொடக்குறிச்சி தாலுகாவில் கருக்கம்பாளையம் , எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 58 குடும்பத்தை சேர்ந்த 187 பேர் என ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் மொத்தம் 120 குடும்பங்களை சேர்ந்த 370 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.