ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு 'சீல்’
ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு 'சீல்’ வைக்கப்பட்டது.;
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு 12 மாத வாடகையும், பொது ஏலத்தில் விடப்பட்ட கடைகளுக்கு 8 மாத வாடகையும் வைப்புத்தொகையாக பெறப்பட்டது.
இந்த நிலையில், வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைக்க முடிவு செய்தனர். அதன்படி, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உதவி வருவாய் அலுவலர்கள் குமரவேல், பூமணி, சிவக்குமார், மைய அலுவலக வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், பொறியியல் பிரிவு கண்காணிப்பாளர் ராஜ கோபால் ஆகியோர் தலைமையில் 6 குழுவினர் நேற்று காலை கனி மார்க்கெட்டுக்கு சென்று வாடகை செலுத்தாத 25 ஜவுளி கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வைப்புத்தொகை முடிந்தும் கடந்த 6 மாதம் முதல் 8 மாதம் வரை 190 கடைகளை சேர்ந்தவர்கள் ரூ.1 கோடியே 75 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பாக்கி வைத்துள்ள 25 கடைகளுக்கு முதல் கட்டமாக 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், நேதாஜி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது என்றனர்.