ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 3 மாணவர்கள் நீக்கம்!

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Update: 2024-11-21 03:00 GMT

மாணவர்கள் நீக்கம் (பைல் படம்).

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஈரோடு செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தியதில் புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசார், வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயிலை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதன்பிறகு அந்த மாணவரையும், பெற்றோரையும் அழைத்து போலீசாரும், பள்ளி நிர்வாகத்தினரும் எச்சரிக்கை செய்து மன்னிப்பு வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி இந்த பள்ளிக்கு 2வது முறையாக மீண்டும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்திய பிறகு புரளி என்பது தெரியவந்தது. 2வது முறையாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், ஏற்கனவே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவரே மீண்டும் இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்ததும், அதற்கு உடந்தையாக 9ம் வகுப்பு படிக்கும் மேலும் 2 மாணவர்கள் செயல்பட்டதும், விடுமுறைக்காக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் 3 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்தனர்.

Tags:    

Similar News