கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 3 பேர் கைது: 3 பேருக்கு வலை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பிலியம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளியங்கிரி (வயது 47). இவர் நம்பியூர் அருகே கூடக்கரை கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்ய நிலத்தை சமன் செய்யும் பணியில் கடந்த 1ம் தேதி ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு நம்பியூரை சேர்ந்த அசரப் அலி, சக்திவேல், கோபியைச் சேர்ந்த மாரிச்சாமி, மணிகண்டன், கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 6 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்களை நிருபர்கள் என்று கூறிக்கொண்டு தோட்டத்தை வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர், அவர்கள் வெள்ளியங்கிரியிடம், சட்டத்துக்கு புறம்பாக உரிய அனுமதியின்றி இங்கு பணியில் ஈடுபடுகிறீர்கள். எங்களுக்கு பணம் தரவேண்டும். இல்லையென்றால் வேலை செய்ய விடமாட்டோம் எனக்கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், இது சட்டத்துக்கு புறம்பான எதுவும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்துள்ளார்.
அதை ஏற்க மறுத்த 6 பேரும் பணத்தை ஏற்பாடு செய்து தராவிட்டால் விவசாயமே செய்ய முடியாது என மிரட்டி சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து வெள்ளியங்கிரி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நிருபர்கள் மாரிச்சாமி, வெங்கடேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.