ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்: மரநாய் இறைச்சி சாப்பிட முயன்றவர்கள் கைது

சென்னிமலையில் மரநாய் இறைச்சி சமைத்து சாப்பிட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-11-10 10:30 GMT

மரநாய் சாப்பிட முயன்ற 3 பேரை படத்தில் காணலாம்.

மரநாய் இறைச்சியை சாப்பிட முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு :- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அம்மாபாளையம் காலனி பகுதியில் வன விலங்கான மரநாய் இறைச்சியை சமைப்பதாக ஈரோடு வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஈரோடு வனவர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டபோது அங்குள்ள ஒரு வீட்டில் மரநாயின் இறைச்சியை சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த வனத்துறையினர் மர நாயின் இறைச்சியை சமைத்து, சாப்பிட தயராக இருந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் அம்மாபாளையம் அரிசன காலனியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் மகேஷ் (47), முருகேசன் (37), தங்க ராசு (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சென்னிமலை முருங்கத்தொழுவு பகுதியில் நாய் ஒன்று மரநாயிடம் சண்டையிட்டு கடித்து கொண்டிருந்தது. இதையடுத்து நாங்கள் மரநாயை மீட்டு, அதன் இறைச்சி சுவையாக இருக்கும் என கருதி, வீட்டிற்கு எடுத்து வந்து இறைச்சியை சமைத்தோம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மூவர் மீதும் ஈரோடு வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண்ணை அடித்த கொன்ற வழக்கில் 3 பேர் கைது:- ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கிடம்பாளையம்புதூரை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சாந்தா (57). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். சாந்தா பெருந்துறையில் பவானி சாலையில் உள்ள வாரசந்தை வணிக வளாக பகுதியில் இரவு தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 1ம் தேதி இரவு வார சந்தை வளாகத்தில் தூங்கிய சாந்தா முகம், தலையில் ரத்தகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று திருவாச்சி விஏஓ அலுவலகத்தில், பெருந்துறை அடுத்த பூவம்பாளையத்தைசேர்ந்த சேர்ந்த கதிர்வேல்(47) என்பவர், பெருந்துறை வாரசந்தையில் சாந்தா என்ற பெண்ணை அடித்து கொலை செய்தததாக தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் பெருந்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் அளித்த தகவலின்படி. சித்தம்பட்டி குளத்தில் பதுங்கியிருந்த பெருந்துறை கந்தாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம்(33), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டி குடியை சேர்ந்த கோபி என்ற பாலமுருகன்(33) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.


விசாரணையில் 3 பேரும் சாந்தாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசில் 3 பேரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நாங்கள் 3 பேரும் நண்பர்கள். கடந்த 1ம் தேதி இரவு 3 பேரும் ஒன்றாக மது குடித்து விட்டு, போதையில் சந்தை பேட்டைக்கு வந்தோம். அப்போது, அங்கு தூங்கி கொண்டிருந்த சாந்தாவை தட்டி எழுப்பி உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், சத்தம் போட்டு ஊரை கூப்பிடுவேன் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 3 பேரும், அருகில் இருந்த கட்டையை எடுத்து சாந்தாவின் தலையில் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.  விசாரணையில் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News