3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம்
வேளாண் காடுகள் திட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.;
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் காடுகள் திட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தெரிவித்தாா்.விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருவாய், வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலை உருவாக்க, விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுகிறது.
இதற்காக ரூ. 11.14 கோடி ஒதுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை, உழவா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூா் அருகே வன விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தயாராக உள்ள மரக்கன்று நாற்றங்காலை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளியன், சில்வா் ஓக், பெருநெல்லி, செம்மரம் போன்ற மரக்கன்றுகள் வனத் துறையின்கீழ் உள்ள அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்து 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 15 ரூபாய் மதிப்பிலான மரக்கன்றை வேளாண் விரிவாக்க மையங்ளில் பதிவு செய்து விவசாயிகள் பெறலாம்.
வேளாண் துறை பரிந்துரைப்படி, வட்டாரத்துக்கு ஏற்ற மரக்கன்றுகளை வனத் துறையின் நாற்றங்காலில் இருந்து இலவசமாகப் பெறலாம். வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றும் பெறலாம்.ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளைப் பராமரிக்க ஊக்கத்தொகையாக, இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7 ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 21 ரூபாய் வரை வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறலாம். இம்மரங்கள் மூலம் மண் வளம் அதிகரித்து, பசுமை பரப்பு, சுற்றுச்சூழல் மேம்படும் என்றாா்.