பெருந்துறையில் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரிசி ஆலையில் 21 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 3 வேன்கள் உள்பட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2025-04-26 05:50 GMT

பெருந்துறையில் அரிசி ஆலையில் 21 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 3 வேன்கள் உள்பட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரேஷன் அரிசியை வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருப்பதாக கோவை குற்ற உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, ஆய்வாளர் கமலி மற்றும் போலீசார் பெருந்துறையை அடுத்த வாவிகடை, பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் அரசி ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் கடத்தலுக்காக ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

இதையடுத்து போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து ஆலைக்குள் இருந்த அனைவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் பவானியை சேர்ந்த ஜானகிராமன், பாபு, பிரபாஷ், சிவா, கார்த்திக் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 வேன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் என 5 வாகனங்கள் பறிமுதல் செய்து, கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 21 ஆயிரத்து 10 கிலோ (21 டன்) ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், இதுதொடர்பாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News