நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 184 அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 184 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 184 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி மாணவர் கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் வெற்றி பெற்று வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளியை சேர்ந்த 27 மாணவர்கள், 78 மாணவிகள் என 105 பேர் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்புக்கு செல்லும் வாய்ப்பு பெற்று உள்ளனர்.
இதேபோல முந்தைய கல்வியாண்டில் பிளஸ்2 முடித்து நீட் தேர்வு எழுதி இடம் கிடைக்காமல், மீண்டும் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 79 பேரும் இந்தாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 41 மாணவர்கள், 143 மாணவிகள் என 184 பேர் மருத்துவப்படிப்பில் சேரும் வாய்ப்பு பெற்று இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 25 பேர் மட்டுமே மருத்துவப்படிப்புக்கான வாய்ப்பு பெற்ற நிலையில், இந்தாண்டு 184 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் வரும் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.