மொடக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை: பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது கைவரிசை!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-04-10 03:30 GMT

மொடக்குறிச்சி அருகே குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் பொன்னம்பாளையம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 6ம் தேதி அதிகாலை சென்றனர்.

பின்னர், சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் (64) என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து குமார் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News