கோபி: டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த சில வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கடந்த வாரத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் யூனியன் அலுவலகத்திற்கு வந்து முறையிட்டனர். மத்திய அரசு நிதி ஒதுக்கினால், நூறு நாள் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
ஆனால், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து, நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய அமைப்பாளர் கார்த்தி வேல் தலைமையில் டி.என.பாளையம் யூனியன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் விரைவில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நூறு நாள் தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சத்தியமங்கலம்-அத்தாணி சாலைக்கு நூறு நாள் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை அருகே பாரத ஸ்டேட் வங்கி முன்பு நின்று சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி சென்றனர்.