கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம்,நோய் பரவும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இடையக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்று ஓரங்களில் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நங்காஞ்சியாற்றில் கலப்பதால், மாசடைந்து சாக்கடை போல் மாறி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. மேலும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கலப்பதை தடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு சுற்றுச் சூழலை கெடுக்கும் எவராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீர்நிலைகளை பாதுகாப்பது மக்களின் கடமை. அதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கழிவுகளை ஆற்றில் கொட்டுவதும் கழிவு நீரை ஆற்றில் கலப்பதும் நாமே நம்மை அசிங்கப்படுத்திக்கொள்வதற்கு சமம். நமது ஆறு. நமது நீர் வளம். என்ற உயர்ந்த எண்ணம் மக்களிடம் வளர வேண்டும். தண்ணீர் என்பது இந்த பூமியின் அமிழ்தம். அந்த அமிழ்தத்தை பாதுகாப்பது நமது கடமை. நீரில்லாத ஒரு வாழ்க்கையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
எத்தனை நாடுகளில் வறட்சியால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகிறார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். வளங்கள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை, வரப்பிரசாதம். நிலம், நீர், காற்று, கடல், காடுகள் இவையெல்லாம் மனித தவறுகளால் மட்டுமே மாசு அடைகிறது.
மணலை சுரண்டி விற்பனை செய்கிறோம். மரங்களை கூசாமல் வெட்டி வீழ்த்துகிறோம். கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை சேர்க்கிறோம். ஆற்று நீரில் இரசாயன கழிவுகளை சிந்திக்காமல் கலக்கிறோம். இப்படி எண்ணற்ற மனித தவறுகளால் பூமியே மாசுபட்டு நிற்கிறது. எப்போது அதன் கோபம் நம்மீது விழுமோ தெரியாது. இயற்கை கோபம் கொண்டால் பிரளயமாகி நிற்கும். அதை உணர்ந்து எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல பூமியை விட்டுச் செல்வது பூமியில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.