திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.
திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராய பிரச்சினையை சரியான முறையில் கண்காணிக்க தவறிய காவல் துறைஅதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகிறார்கள். மேலும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் புறநகர் பகுதியில், அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் வேட்டையில் தாலுகா காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் புறநகர் பகுதியில், அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் காவலர்கள் புறநகர் பகுதிகளில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வத்தலகுண்டு பைபாஸ் சர்வீஸ் ரோடு ரைஸ் மில் அருகே அரசு அனுமதி இன்றி மதுபானம் விற்பனை செய்த சாம்சன்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 68 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.